Sunday, April 14, 2013
அலகு குத்துதல்,piercing the cheek with a big rod,
ஒவ்வொரு வருடமும் சித்திரை ஒன்று அன்று பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து அடப்பன்வயல் அய்யனார் கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர். சாந்தனாதர் சன்னதியிலிருந்து புறப்படுவார்கள்.
அலகு குத்துதல் என்பது இந்துக் கோயிற் திருவிழாக்களில் பாற் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவது ஆகும். இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து (முக்கியமாக விநாயகருக்கு) தீபாரதனை காட்டிய பின் நடைபெறும்.பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை கன்னத்தில் குத்தி, மற்ற கன்னத்தில் எடுப்பார்கள்; அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள். சில நேரங்களில் நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கி குத்துவதுமுண்டு.
இன்றைய காலத்தில் மனிதர்கள் எதனை நம்பாவிட்டாலும் கடவுளை நம்புகின்ற பழக்கம் அதிகரித்து வருகிறது. அதன்விளைவாக துன்பங்களை போக்கும் கடவுளுக்காக தன்னை துன்பப்படுத்திக் கொள்ளும் அதி தீவிர பக்தர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக அலகு குத்துவதைச் சொல்லலாம்.
ஒரு சிறு ஊசியோ அல்லது முல்லோ மனிதனின் காலில் குத்தினால் வலி உயிரை எடுத்துவிடும். ஆனால் ஒரு சிறிய மற்றும் பெரிய சூலாயுதத்தை நாக்கிலும், கன்னத்தின் ஒரு பகுதியில் குத்தி மறு பகுதியின் வழியே எடுத்து உலா வரும் இறைபக்தர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் பழக்கம் குறிப்பாக கிராம காவல் தெய்வங்களை வழிபடும் கிராம மக்களிடம் அதிகமாக இருக்கிறது. அலகு குத்துதல் என்பதற்கு பல வரலாறுகள் இருக்கிறது. வாழ்வியலில் சராசரி வாழ்க்கை நடத்தவே போராடும் மக்கள் தனது வேண்டுதலை தீவிரமாகவும், அதே சமயத்தில் கொடூரமாகவும் வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக அலகு குத்துவதைச் சொல்லலாம். இந்த அலகு குத்தும் பழக்கம் அனைத்து கோவில்களிலும் கிடையாது.
குறிப்பாக கிராம காவல் தெய்வங்களான காளியம்மன், மாரியம்மன், எல்லையம்மன், திரொபதியம்மன், எக்களாதேவியம்மன், முனியாண்டி, கரடிப்பேச்சி மற்றும் முருகன் கோவில்களில் தான் அதிகமாக இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் கிராம காவல் தெய்வங்களின் பொங்கல் மற்றும் கொடை விழாக்களின் போது தான் பக்தர்கள் இந்த அலகு குத்தும் பழக்கத்தை செய்து வருகின்றனர். அலகு குத்துவது அனைத்து பக்தர்களிடம் கிடையாது. 10,000 பேர் வழிபாடு நடத்துகின்ற ஒரு கோவில் திருவிழா என்றால் அதில் சிலர் மட்டுமே அலகு குத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இந்த அழகு குத்தும் விழா வெளியில் இருந்து பார்க்கும் நகர மக்களுக்கு வேண்டுமானால் கொடூரமாக தெரியலாம். ஆனால் கிராம மக்களுக்கு அது போன்ற விழாக்களும், வேண்டுதல்களும் வாழ்வியல் கலாச்சாரத்தோடு கலந்து விட்டது. அதனை அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்று. தெளிவாக சொல்லவேண்டும் என்றால் நகரில் இருப்பவர்களுக்கு மின்சார வசதியை எப்படி அத்தியாவசிய தேவையாக இருக்கிறதோ அதே போல் தான் அலகு குத்துதல், பூக்குளி இறங்குதல், புதைகுழியில் குழந்தைகளை புதைத்து எடுத்தல் நிகழ்ச்சிகளும் கிராம மக்களுக்கு இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகளால் சமூக ஒற்றுமைக்கு நன்மை அளிக்கிறதோ இல்லையோ எந்தவித தீமைகளும் அளிக்கவில்லை என்பது தான் உண்மை. வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு தங்களின் அடுத்த வேலைகளினை பார்த்து சென்று விடுகின்றனர். இதனை நாம் போற்றி பாராட்ட விட்டாலும் குறை சொல்லுதல் கூடாது என்கிறார் வரலாற்று ஆசிரியரான லட்சுமிநாராயணண்.
அலகு குத்துவது என்பது சாதாரண விசயம் இல்லை என்று கூறும் அலகு குத்துவதில் அனுபவம் வாய்ந்த கிராம பூசாரியான காளியப்பன். இது ஒரு உன்னத வேண்டுதல் விழா என்கிறார். தீராத நோய், மனக்கவலைகள், குடும்ப க~;டங்கள், தங்களின் வாரிசுகளின் நலன்கள் போன்றவற்றை மனதில் கொண்டு வேண்டுதல் வேண்டிக் கொண்டு பின் கோவில் விழாக்களில் அதனை மக்கள் நிறைவேற்றுகின்றனர். இந்த அலகு குத்தும் விழா ஒரு நாளில் வேண்டிக் கொண்டு மறு நாளில் வேண்டுதலை நிறைவேற்றுகின்ற விழா இல்ல. திருவிழா ஆரம்பமானவுடன் அப்பொழுது ஆண்களும் பெண்களும் தங்களின் வேண்டுதலை மனதுக்குள் வேண்டி பின் மறு வருடம் கோவில் திருவிழா நடைபெறும் பொழுது தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் வேண்டிக் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு எந்த வித தீய மற்றம் வாழ்வியல் நடைமுறைக்கு குந்தகம் இல்லாமல் விரதம் இருந்து பின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
மண்ணோடும் மக்களோடும் வாழ்க்கை நடத்தும் கிராம மக்கள் இறைவனிடம் தனது துன்பங்களில் இருந்து விடுபட வேண்டுதல் தான் சிறந்த வழி என்று நம்புகின்றனர். ஏனெனில் அவர்களுக்கு கோடி கோடியாக பணத்தை எடுத்துக் கொண்டு போய் பணத்தை குறி வைத்து நடத்தப்படும் கோவில்களுக்கு செல்ல வழியில்லை. கிராம காவல் தெய்வங்கள் தான் அவர்களுக்கு எல்லாமே. அவர்கள் வெயிளிலும் மழையிலும் நனையும் பொழுது கிராம காவல் தெய்வங்களும் வெயிளில் கருகுகிறது மழையில் நனைகிறது. அதனால் இது போன்ற வேண்டுதல்களை அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்கிறார்.
அலகு குத்துவதால் வலி ஏற்பட வில்லையா என்று அலகு குத்தியிருக்கும் மாடசாமியிடம் கேட்ட பொழுது முதலில் அலகு குத்தும் பொழுது லேசாக வலி இருந்தது. ஆனால் அலகு குத்தியவுடன் இரத்தம் வராமல் தடுக்க அப்பகுதியில் விபூதியை 'மருலாடி' (அலகு குத்துபவரை மருலாடி என்று சொல்கின்றனர்) போட்டவுடன் வலியும் இல்லை ரத்தமும் வருவது இல்லை. இதற்கு காரணம் இறைவனின் அருள் தான் காரணம் என்கிறார். அதே போல் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிய பின் குத்திய அலகினை மருலாடி எடுத்த பொழுது ரத்தம் வராமல் தடுக்க தேங்காய் பருப்புகளை கடித்த தின்ற உடன் ரத்தம் வருவதில்லை என்கிறார். அலகு குத்தி வருவது தனக்கு 4வது முறை என்கிறார். அதனால் தனது வாழ்வில் ஒரு வித மகிழ்ச்சி கிடைப்பதாகவும் சொல்கின்றார். இந்த அலகு குத்தும் பழக்கம் ஆண்கள் மட்டும் அல்ல பெண்கள் தான் கிராமப் பகுதிகளில் அதிகமாக செய்து வருகின்றனர் என்கிறார்.
Labels:
எக்களாதேவியம்மன்,
எல்லையம்மன்,
காளியம்மன்,
திரொபதியம்மன்,
மாரியம்மன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment